புதன், 29 ஜூலை, 2015

84 வயது குழந்தையின் மறைவு




இந்தியா இழந்தது ...
விஞ்ஞானியையோ
நாட்டின் முன்னாள் குடியரசு தலைவரையோ,
ஏவுகணை நாயகனையோ அல்ல
சுயநலமற்ற நல்ல மனிதரை இழந்தது..
இந்தியாவின் வழிகாட்டியை இழந்தது..
இரண்டாவது காமராசரை இழந்தது..

எத்தனையோ குடியரசு தலைவர்கள் வரலாம்
இந்தியா பல விஞ்ஞானிகளை காணலாம்
இன்னும் எவ்வளவோ முன்னேற்றங்களை பார்க்கலாம்
ஆனால் அப்துல்கலாம் போல் ஒரு மாமனிதரை காணுமா??

ஏழை குடும்பத்தில் பிறந்து
அரசு பள்ளியில் தமிழ் வழிக்கல்வி பயிலும்
ஒவ்வொரு மாணவர்களுக்கும் முயற்சி,
எளிமை, நேர்மையின் முழு உருவமான
அப்துல்கலாம் அவர்களை தவிர வேறு
எவரும் மிகச்சிறந்த உதாரணமாக
திகழவே முடியாது...

கொடுமையிலும் கொடுமை
இளமையில் வறுமை!!
அத்தனை துன்பங்களையும் தன்
விடாமுயற்சியால் களைந்து...
இந்தியாவின் குடியரசு தலைவர்
பதவிக்கு வர எவ்வளவு
இடற்பாடுகளை சந்தித்திருக்க வேண்டும்!!
எவ்வளவு தியாகங்கள் செய்திருப்பார்!!
அவர் பட்ட இன்னல்களையெல்லாம்
கற்பனை கூட செய்துபார்க்க முடியாது!!..
நமக்கு சாதாரண தோல்வியோ துன்பமோ வந்தால் கூட துவண்டுவிடுகிறோம்..
எத்தனை அவமானங்களை,
தோல்விகளை
சந்தித்திருப்பார்!! ஆனாலும்
முகத்தில் சோர்வோ, கலக்கமோ,
கோபமோ, விரக்தியோ கலாமின்
குழந்தை முகத்தில் எவரும் இதுவரை
கண்டதில்லை!!
பிறந்தது முதல் இறந்தது வரை
தனக்கென்று எதுவுமே செய்துகொள்ளாமல்
அவரின் இந்த மானிட பிறவியை
முழுதும் நாட்டிற்காக மட்டுமே வாழ்ந்துள்ளார்!!

ஒரு மனிதன் எவ்வளவு நல்லவனாக
இருந்தாலுமே பதவியும் பணமும்
வந்துவிட்டால் அவன் எப்படியெல்லாம்
மாறுவான் என்பதற்கு எண்ணற்ற
உதாரணங்கள் உள்ள இந்த நாட்டில்,
பதவி பணம் இதெல்லாம் கிடைத்த பிறகும்
அவற்றையெல்லாம் உதறித்தள்ளிவிட்டு
மனிதநேயம், தேச பற்று, எளிமை,
நேர்மை, மாணவர்களின் எதிர்காலம்
இதை பற்றியே எப்போதும்
சிந்தித்துக்கொண்டிருந்த உம்மைப்போல்
ஒரு மாமனிதரை இனி இந்தியா காணுமா???

உங்களை பெற்றதற்கு இந்தியாவும்,
தமிழும் பெருமை படுகிறது...
பாரதி, வள்ளுவன், கம்பனை பெற்றதற்கு
தமிழ் எவ்வளவு பெருமை
படுகிறதோ அதேபோல் தமிழ்
மாதவம் செய்திருக்கிறது
கலாமை பெற்றதற்கும்!!

வருங்கால தலைமுறையை
பொறுத்தவரை காந்தி, நேரு
போல கலாமும் என்றோ பிறந்து, வாழ்ந்து
மறைந்துவிட்ட ஒரு விஞ்ஞானி... ஆனால்,
எங்களுக்கு அப்படியில்லை!!
ஒரே காற்றை சுவாசித்து ஒரே
காலகட்டத்தில் வாழ்ந்ததன் தாக்கமாக
கூட இருக்கலாம்..ஏதோ ஒன்று...
வார்த்தைகளால் சொல்ல முடியாத
இதயப்பூர்வமான உணர்வு கலாமிற்கும்
இத்தலைமுறை இந்தியர்களுக்கும்
நிச்சயம் இருக்கிறது!!!! காந்தியையும்,
காமராசரையும் பார்த்ததில்லை....ஆனால்,
கலாமை பார்த்திருக்கிறோம்!!!

இனம், மொழி, மதம் கடந்து
இந்தியாவையே புரட்டிபோட்ட
மாமேதையின் பிரிவு... அதை
வார்த்தைகளால் சொல்ல முடியாது..
இந்த அன்பை நீங்கள் இருக்கும்போதே
காட்டியிருந்தால் நிச்சயம்
பெருமகிழ்வு அடைந்திருப்பீர்கள்!!
நமக்குதான் நம் அருகில் இருக்கும்வரை
எதன் அருமையும் தெரியாதே...
கலாம் மட்டும் விதிவிலக்கா என்ன!!!?

ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒரு மாமனிதர்
உருவாகலாம்..ஆனால், அப்துல்கலாம்
என்ற தனி மனிதனின் சிறப்புகள், குணங்கள்,
ஆசைகள், கனவுகள், இலட்சியங்கள்,
தேச பற்று, தியாகம், உழைப்பு இவற்றை
அவர் இடத்தில் இருந்து யாராலும் நிரப்ப
முடியாது!! கலாம் இந்தியாவிற்கு கிடைத்த
அதிசய மனிதர்களில் ஒருவர்!!

இதில் ஆச்சரியம் என்னவென்றால்
கலாமிற்கு எப்போது வயதானது என்றே
தெரியவில்லை..அதற்கான எந்த அறிகுறியும்
இதுவரை நாம் பார்த்ததில்லை...
எப்பொழுதும் சுறுசுறுப்பு, குழந்தை போல்
குதூகலம், மெத்த படித்த கர்வமின்றி
எந்த வயதிலும் தெரியாததை
தெரிந்துகொள்ளும் ஆர்வம்...
84 வயது குழந்தை என்று
சொன்னால் அது கலாமை தவிர வேறு
யார்...

உங்கள் ஆத்மா இந்திய இளைஞர்களையும்,
இந்தியாவையும் உங்கள் அரிய புத்தகங்கள்,
உத்வேகமூட்டும் கருத்துகள்,
பேச்சுகள் மூலம் வழிநடத்திகொண்டுதான்
இருக்கும்..எங்கள் மனங்களிலும்
இந்திய நாட்டிலும் எந்நாளும்
வாழ்ந்துகொண்டுதான் இருப்பீர்கள்!!
உலகம் உள்ளவரை உங்கள் புகழ் வாழும்!!

ஆழ்ந்த அனுதாபங்களோடு....