திங்கள், 28 செப்டம்பர், 2015

மகிழ்ச்சியாக வாழ மூன்று வழிகள்

வெளிசூழ்நிலை என்னவாக இருந்தாலும்
மனம் அனுமதிக்காமல் நமக்குள் எந்த மாற்றமும் நடக்கபோவதில்லை...

நம் கவலைக்கு பொதுவாக மூன்று காரணங்கள்....
முதலாவது,
 "நம்மை பற்றி மற்றவர்கள் என்ன
நினைப்பார்கள் என்று நினைத்து கவலை படுவது. இரண்டாவது, ஒரு செயலை செய்துமுடித்த பின் அதில் திருப்தியடையாமல்...."அதை வேறுவிதமாக செய்திருக்கலாமோ" என்ற கவலை.
மூன்றாவது, நாளை பற்றிய கவலை...(எதிர்காலம்)

இவற்றை கையாள்வது சுலபம்...

பிரச்சினைக்கு தீர்வு கிட்டும் வரைதான் அது பிரச்சினை...தீர்வு கிடைத்தபின் அது ஒரு அனுபவம்..

முதலாவது கவலை, நம்முடைய பிரச்சினையே அல்ல, அது முழுதும் மற்றவர்களின் பிரச்சினை..
காந்தியையே குறைகூறும் உலகத்தில் நம்மை பற்றி அப்படி என்ன புகழ்ந்துவிடப்போகிறார்கள்? என்னதான் புறம் கூறுதல் கூடாது என்று சொன்னாலும் / படித்தாலும் கேட்டுவிடவா போகிறோம்?

வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமானால், நமக்கு பின்னால் நம்மை பற்றி என்ன பேசுகிறார்கள்? என்பதை தெரிந்துகொள்ளாமல் இருக்க பழகிக்கொள்ள வேண்டும். இது பாதி கவலையை இல்லாமல் செய்துவிடும்..

மனிதர்கள் பல விதம். பத்து பேருக்கு பிடித்ததுபோல் இன்னொரு பத்துபேரால் கூட இருக்க முடியாது. பிறகெப்படி ஒருவரால் அனைவருக்கும் பிடித்ததுபோல இருக்க முடியும்? முடியாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்... மாற்ற முடியாத விஷயங்களோடு மல்லுக்கு நிற்காதீர்கள்.

நம்மை பற்றி பிறர் என்ன பேச வேண்டும், எப்படி நினைக்க வேண்டும் என்று நாம் நினைக்கிறோமோ அதைப்போல் நாம் நடந்துகொள்ள வேண்டும். அதற்காக, அதேபோல் அவர்கள் நினைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு கூடாது.. வேறுவிதமாக நினைத்தால் அது நம்முடைய பிரச்சினை அல்ல...அவர்களுடைய கண்ணோட்டம் வேறு என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

இரண்டாவது, எதிலும் திருப்தியடையாமல் இருப்பது,
இதற்கு ஒன்றுதான் சொல்ல வேண்டும். கடந்த காலத்தை சரி செய்யவே முடியாது. முடிந்தது முடிந்ததுதான். என்று நமக்கு நாமே சமாதானம் சொல்லிக்கொள்ள வேண்டும். மின்னஞ்சலை அனுப்பும் முன் பல தடவை சரி பார்த்துகொள்ளலாம். ஆனால், அனுப்பிய பிறகு ஒரு முறை கூட, செய்தியை வேறுவிதமாக சொல்லியிருக்கலாமோ...என்று எண்ணவே கூடாது. அதில் அணுவளவும் பயனில்லை. அனுப்பிவிட்டோம். வேலை முடிந்தது.
பதில் வரும்வரை அதை பற்றி எதுவும் சிந்திக்க கூடாது. இதை வாழ்வில் எல்லா செயலிலும் பொருத்தி பார்க்கலாம்.

மூன்றாவது காரணம், எதிர்காலத்தை நினைத்து கவலை படுவது....
பக்திதான் இதற்கு மிகச்சிறந்த மருந்து. ஏதோ ஒன்றின் மேல் முழு நம்பிக்கை வைப்பது. அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். சிவன், அல்லா, இயேசு, வானம், கடல், பூக்கள், மலை, மண் என எதுவாகவும் இருக்கலாம். ஆனால், கேள்வி கேட்காத நம்பிக்கையாக இருக்க வேண்டும். அந்த உண்மையான பக்தியோடு, நாளை எது நடந்தாலும் அது என் நல்லதுக்குத்தானே தவிர கவலை பட அல்ல என்று மனதார நம்ப வேண்டும். அடுத்த பத்து ஆண்டுகளில் நான் எப்படி இருக்க வேண்டும் திட்டமிடுவது வேறு, கவலை படுவது வேறு. எதிர்காலத்தை பற்றி திட்டமிடுங்கள் ஆனால் கவலை படாதீர்கள்.

ஒன்று மட்டும் உண்மை... கவலை படுவதால் எதுவும் மாற போவதில்லை. மறுமுறை உபயோகிக்க வேண்டும் என்று துணிகளை துவைக்கிறோம், பாத்திரங்களை கழுவுகிறோம், வாகனங்களை கூட குறிப்பிட்ட கால இடைவெளியில் பரிசோதிக்கிறோம். இவைகளுக்கே நாம் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கும்போது நம் மனதை எப்படியெல்லாம் பராமரிக்க வேண்டும் என்று யோசியுங்கள்!

டெல்கார்னகி சொன்னதுபோல, எந்த பொருளுக்கும் அதைவிட கூடுதல் விலை கொடுத்து வாங்குவது முட்டாள்தனம். அதைப்போல அற்பமான விஷயங்களுக்கு அதிக நேரம் ஒதுக்கி கவலைப்படுவதும் முட்டாள்தனம்தான். கவலை இல்லாமல் மகிழ்ச்சியாக வாழ்வோம்.

வாழ்க வளமுடம்...

















அன்புடன்
சங்கீதா சீனிவாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக