வியாழன், 3 செப்டம்பர், 2015

இயற்கையின் அதிசயம்...

தாஜ்மஹாலோ, சீனப்பெருஞ்சுவரோ
அல்ல அதிசயம்...!



இவைதான் அதிசயங்கள்..

கண்களை மூடி சில நிமிடம் இந்த கற்பனை வனத்துக்குள் வாழ்ந்து பாருங்கள்!!

பச்சை பசேல் என கண்ணுக்கு குளிர்ச்சியூட்டும் படர்ந்து விரிந்த பசுமையான வனம்..
அழகிய பாதை நெடுகிலும் பல் வண்ண பூச்செடிகளும்,
பவழம் போன்று மின்னும் கூழாங்கற்களும்...
நடைபாதையில் வண்ணக்கம்பளம்
விரித்தது போல் பாதம் தொட காத்திருக்கும் மஞ்சள், சிகப்பு, ஊதா மற்றும் வெண்மை நிற பூக்கள்...



அதில் கால் வைக்கவோ வரவில்லை மனம்...
அதிலிருந்து வரும் மணமோ நெகிழவைக்கிறது மனத்தை..!!

பூக்களில் தேனருந்தும் வண்ணத்துப்பூச்சிகள்...
இலைகளில் முத்து
போல் பளிச்சிடும் பனித்துளி..
மரக்கிளையில் பழம் கொறிக்கும் துருதுரு அணில்...
கண்ணெதிரே, நீண்ட பாலருவி...
சில்லென்று முகத்தில் முத்தமிடும் மழைச்சாரல்...
இமைகள் மூடும் கணம்.... திறந்தது மனம்!

வெள்ளி கொலுசு
போல் சலசலவென சத்தமிடும் தூய
நீரோடை, அதில் முகம் பார்க்க வளையும்
வரிக்கவிதைகள்...!!

மனிதர்களின் ஆரவாரம் துளியும் இன்றி
ஆழ்ந்த அமைதியின் நடுவே...
குருவிகளின் கீச்சிடும் சத்தமும்,
படபடவென கூட்டமாக சிறகடித்து
பறக்கும் பறவைகளும்....
எங்கிருந்தோ வரும் புல்லாங்குழலின்
இனிய இசையும்....!!
உலகையே மறக்கசெய்யும் இவை ஒட்டுமொத்த வனத்தையுமே அலங்கரித்திருந்தன.....


இதுமட்டுமா....

கரிய இரவுக்கு ஒளியூட்டும்
பால் வண்ண பவுர்ணமி நிலவு
அதிகாலை அமைதியும், செண்பகத்தின்
இசையும்..பருத்திபோல் அலைபாயும்
கருமேகம்...வானத்தை வண்ணத்தால்
அலங்கரிக்கும் அழகிய வானவில்! .
லேசான இடி, மின்னல்...
மகிழ்ச்சியில் தோகை விரித்தாடும்
மயில்!!

அந்த அழகிய தருணம்...
மனதை தொலைத்து....கவலை, சோகம்,
கண்ணீர் மறந்து.......புதிதாய்
பிறந்ததுபோன்ற புத்துணர்ச்சி!!
இமை மூடி திறக்கும்
நிமிடங்களை கூட சேர்த்து வைத்து ரசிக்கனும்..

நமக்கு ஐந்து அறிவு இருந்திருந்தால்...
அம்பானியும் இல்லை!! ஐஸ்வர்யா ராயும் இல்லை!!
ஆறறிவு இல்லாவிட்டாலும் ஒவ்வொரு
பூக்களுமே ஐஸ்வர்யா ராய்தான்!!

இயற்கைதான் எல்லாமே.....
இயற்கையை ரசித்தாலே போதும்..
இயற்கையை உணர்ந்தாலே போதும்...

விண்வெளிக்கு செயற்கைக்கோள் அனுப்ப முடிந்த மனிதனால் ஒரு சொட்டு தண்ணீரை கூட உருவாக்க முடியாது என்று உணர்ந்தாலே போதும்!..
மனிதனால் உருவாக்கப்பட்ட பண காகிதத்திற்காக காடுகளை அழிக்கும் நம்மால் சிறு புல்லை கூட உருவாக்க முடியாது என்று உணர்ந்தாலே போதும்..!!
இயற்கையின் பேராற்றலுக்கு முன் நாம் ஒன்றுமே இல்லை என்று உணர்ந்தாலே போதும்..!! நம்மால் உருவாக்க முடியாத விஷயங்களை கை எடுத்து வணங்கி அதை பொன் போல் பாதுகாக்க வேண்டியது மனித இனத்தின் கடமை!

இயற்கையோடு இயைந்து வாழ்வோம்..
இயற்கைக்கு உயிர்கொடுப்போம்...
இயற்கையை மனதார நேசிப்போம்...
இயற்கையின் படைப்புகளை ரசிப்போம்...


























அன்புடன்
சங்கீதா சீனிவாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக